கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை

கணக்கில் வராத ரூ.2.22 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஜூலை 18-
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை ஒரே நேரத்தில் தாசில்தார் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதன்படி, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐ மஞ்சுநாதன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாலை, கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
தாசில்தார் அலுவலகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சர்வேயர்கள் பிரிவு, தனி வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக தாசில்தார் அலுவலக கதவுகளை அடைத்த போலீஸார், அங்கிருந்த ஒவ்வொரு அலுவலர்கள் மற்றும் அங்கிருந்த வர்கள் என அனைவரையும் சோதனை செய்தனர்.
தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்தனர். இதில், ஒவ்வொரு அலுவலர்கள், சர்வேயர்கள், விஏஓக்கள், இடைத்தரகர்கள் என அனைவரிடமும் கணக்கில் வராத பணம் இருந்தது தெரிந்தது. மேலும், தாசில்தார் ராஜலட்சுமி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு மாலையில் வந்தார். அவரது செல்போனை ஆய்வு செய்த போலீஸார், ஜிபேயில் பண பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதா என ஆய்வு செய்து, அவர் வந்த வாகனத்தை சோதனை செய்தபின், அவரையும் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் வேப்பனஹள்ளி ஆர்ஐ பிரபாகரனிடம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 770, விஏஓக்கள் மணவாரனப்பள்ளி சரவணனிடம் ரூ.5,000, கத்தேரி அனிதாவிடம் ரூ.9,000, கூலியம் சுரேஷ்குமாரிடம் ரூ.7,500, ஆலப்பட்டி ஆர்ஐ சீனிவாசனிடம் ரூ.5,000, மூத்த வரைவாளர் சிவக்குமாரிடம் ரூ.2,058 மற்றும் இடைத்தரகர்களான நூர்முகமதுவிடம் ரூ.44,700, குமார் ரூ.10,200, பால்ராஜிடம் ரூ.5,050 என மொத்தம் கணக்கில் வராத 2 லட்சத்து 22 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்







