உயிர்ம (இயற்கை) வேளாண்மை ஊக்குவிப்பு:
- சிறப்பு ஊக்கத்தொகை: 2026-27ஆம் ஆண்டில் மாநில அரசின் சிறப்புத் திட்டமாக 20,000 ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தேசிய இயக்கத் திட்டங்கள்: பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் (NMNF) கீழ் புதிய இயற்கை வேளாண்மைத் தொகுப்புகளை உருவாக்கவும், தொடர் செயல்பாடுகளுக்காகவும் ரூ.9.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மண்புழு உரக்கூடங்கள்: நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- இலவச உயிர்ம சான்றிதழ் & கட்டண விலக்கு: தேசிய உயிர்ம உற்பத்தித் திட்டத்தில் புதிதாகப் பதிவு செய்யும் விவசாயிகள் மட்டுமின்றி, மாறுதல் காலத்தில் (Conversion Period) உள்ள விவசாயிகளுக்கும் புதுப்பித்தல் கட்டண விலக்கு அளிக்கப்பட்டு இலவசமாக உயிர்ம சான்றிதழ் வழங்கப்படும்.
- நச்சு மதிப்பீட்டுப் பரிசோதனை மானியம்: உயிர்ம விளைபொருட்களில் நச்சுத்தன்மை இன்மையை உறுதி செய்து ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுச் சந்தையில் கூடுதல் விலை பெற, நச்சு மதிப்பீட்டுப் பரிசோதனை கட்டணத்திற்கு முழு மானியம் வழங்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மண் சீர்திருத்தம், கார்பன் வர்த்தகம் & விழிப்புணர்வு:
- நிலச் சீர்திருத்தம்: கலர் மற்றும் உவர் தன்மையால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்க 2,000 ஏக்கரில் செயல்விளக்கம் மேற்கொள்ள ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொழில்நுட்ப விழிப்புணர்வு: மண் நல மேம்பாட்டுத் தொழில்நுட்பங்களை உழவர்களிடம் கொண்டு சேர்க்க ரூ.2 கோடியில் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- கார்பன் வர்த்தக ஊக்கம்: நேரடி நெல் விதைப்பு, மாற்று நீர் பாசன முறை போன்றவற்றைப் பின்பற்றி பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்து கார்பன் சேமிக்கும் விவசாயிகளுக்கு, கார்பன் வர்த்தகம் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கச் செய்ய 2,000 ஏக்கரில் செயல்விளக்கங்கள் அமைக்க ரூ.60 லட்சம் மாநில நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மாநில அரசின் நிதி:
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் போதிய அளவில் குறித்த பருவத்தில் கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது. சான்றளிக்கப்பட்ட விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மானியத்தை 2026-27ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு நிறுத்தியபோதிலும், விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே இச்சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி, 7,730 மெட்ரிக் டன் சான்று நெல் விதை உற்பத்தி மானியமும், 14,570 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட விதைகளை மானியத்தில் விநியோகிப்பதற்கான விநியோக மானியமும் வழங்க 2026-27ஆம் ஆண்டில் ரூ.34.72 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.